மோடிக்கு வாங்கப்பட்ட புதிய போயிங் 777 விமானங்கள்
விவிஐபி-க்கள், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வெளிநாட்டு தேவைகளுக்காக தற்போது போயிங் 747 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியா ஒன் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த விமானங்களுக்கு பதிலாக தற்போது போயிங் 777 ரக விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மட்டுமின்றி குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரின் பயன்பாட்டுக்காகவும் இந்த புதிய விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய போயிங் விமானங்களுக்கு கஸ்டமைஸ் பணிகள்
இந்த விமானத்திற்கான கஸ்டமைஸ் பணிகள் அமெரிக்காவின் டல்லாஸ் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வானூர்தியின் உட்புறத்தில் விவிஐபி-க்களின் தேவையை கருத்தில் கொண்டு கட்டமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணம் செய்பவர்களுக்காக தனி படுகை அறை, செயற்கைக் கோள் மூலம் தொடர்பு கொள்ளும் வசதி, தொலைக்காட்சி, மருத்து அவசர காலம் ஏற்பட்டால் அதற்குரிய அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற பல்வேறு வசதிகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் போயிங் 747 200பி விமானத்தில், எதிர்பாராத தாக்குதல்கள் ஏதேனும் நடந்தால் அதிலிருந்து தப்பிப்பதற்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதில் குறிப்பிடும்படியாக, ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்க வழிவகை செய்யும் பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறுகிறது. விமானம் இருக்கும் இடத்தை அறிந்து தாக்குதல் நடத்த வரும் ஏவுகணைகளை திசை திருப்பி விடுவதற்கு இந்த தொழில்நுட்பம் வழிவகை செய்யும். எதிரி நாடுகளில் ரேடாரில் சிக்காமலும் இந்த விமானங்களில் பயணம் செய்ய இயலும். தற்போது இந்த பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் புதிய போயிங் 777 விமானத்தில் இடம்பெறுகிறது. கூடுதலாக, ஏவுகணைகளை தாக்கி அழிப்பதற்கான தொழில்நுட்பம் இந்த விமானத்தில் வழங்கப்படவுள்ளது.